×

குத்துவிளக்கு பூஜையை எப்படிச் செய்யவேண்டும்? தனியாக வீட்டிலும் செய்யலாமா? அதனால் கிடைக்கும் பயன் என்ன?

ஒரு விபத்து காரணமாக வலக்கையை இழந்தவன் நான். ஆகவே, என் இடக்கையால் இறைவனை பூஜித்து வருகிறேன். இவ்வாறு செய்வது தவறா?
– எம்.விநாயகம்,கடலூர்.

வலக்கை, இடக்கை இரண்டுமே ஆண்டவன் அளித்தவைதானே! வலக்கை செயல்பட முடியாமல் போய்விட்ட நிலையில் உங்கள் இடக்கையால்தானே எல்லாப் பணிகளையும் செய்கிறீர்கள்? அதுபோல்தான், இறைப் பணியும். தன் வாயில் நிரப்பி வந்த நீரை அபிஷேகம் செய்தும், தன் தலையில் சூடிவந்த மலரால் அர்ச்சித்தும் இறைவனை பூஜித்த வேடன்தான் கண்ணப்ப நாயனார். தனக்கு பூஜை செய்யப்படும் விதம், தன்னை வழிபடும் பக்தரின் தகுதி என எதையும் இறைவன் பார்ப்பதில்லை. பூஜிக்கும் பக்தர்கள் மனத்தினை மட்டுமே கவனிக்கிறார் கடவுள். எனவே, நீங்கள் எந்தக் கையால் பூஜை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. மனம் ஒன்றி வணங்குகிறீர்களா, அதுபோதும் இறைவன் அருளைப் பெற.

ராம பக்தனான அனுமனுக்கு ராமரைவிட அதிக கோயில்கள் இருப்பதை காண்கிறேன், கேள்விப்படுகிறேன். இது ஏன்?
– வினோதினி மைத்ரேயன், ஸ்ரீரங்கம்.

பக்தி என்றாலே சேவை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பக்தி செலுத்துதல் என்றால் சேவைபுரிதல்தான். அனுமனின் சேவை எப்பேர்ப்பட்டது! தன் நாயகனான ராமனுக்கு அவன் ஆற்றிய சேவைகள்தான் எத்தனை! ராமனை சந்தித்த நாளிலிருந்து தன் தலைவன் சுக்ரீவனுக்கு அவன் உதவுவான் என்று தலைவனுக்காகத்தான் ராமனின் நட்பை அவன் வளர்த்துக் கொண்டானே தவிர, தன் சுயநலத்துக்காக இல்லை. அப்போதிருந்தே அவன் ராமன் மீது பக்தி கொள்ள ஆரம்பித்தான்.

அந்த கணத்திலிருந்து ராம பட்டாபிஷேகம் வரை மட்டுமல்ல; அடுத்தடுத்த யுகங்களிலும் ராம சேவையை மேற்கொண்டிருக்கும் அற்புதத் தொண்டன் அவன். அப்படி ஒரு சேவை மனப்பான்மையை அனைத்துப் பக்தர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாலேயே, அதை உணர்த்தும் வகையில் அனுமன் கோயில்கள் அதிகமிருக்கின்றன என்று நினைக்கிறேன். மானிட அவதாரத்துக்கு அனுமன் ஆற்றிய பணி, இந்தக் கலிகாலத்தில் இன்னொன்றையும் புரியவைக்கும். அது ‘மனிதனுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை’ என்பதுதான்.

பிரம்மச்சரியத்திற்கும் கடவுள் தேடலுக்கும் என்ன சம்பந்தம்? புராணங்களில் வரும் கடவுள் கல்யாணங்கள் எதை வலியுறுத்துகின்றன?
– ராணி, ஆம்பூர்.

பிரம்மச்சரியம் என்பது ஒருவித சக்தி. விளையாட்டு வீரர்களுக்குக்கூட இது அவசியம் என்று சொல்லப்படுகின்றது. பரீட்சைக்குப் போகும் மாணவனுக்கு இது நல்லது என்பது உண்மை. இறை வழிபாட்டிலும் இதற்கு நல்ல பங்கு உண்டு. கடவுளர் திருமணங்கள் இல்வாழ்க்கையின் லட்சணங்களைச் சொல்பவை. நெறிப்பட்ட காமம் மிக முக்கியம். பிரம்மச்சரியத்தின் மேன்மையை உணர்ந்து பிறகு திருமணம் செய்து, நெறிப்பட்ட காமம் அனுபவிக்கும்படி புராணங்கள் சொல்கின்றன.

குத்துவிளக்கு பூஜையை எப்படிச் செய்யவேண்டும்? தனியாக வீட்டிலும் செய்யலாமா? அதனால் கிடைக்கும் பயன் என்ன?
– கந்தசாமி, பெரும்பாக்கம்.

கடவுளை ஜோதிஸ்வரூபமாகப் பார்த்து வழிபடுவதே குத்துவிளக்கு பூஜை. பெண்களுக்கு குத்துவிளக்கு ஒரு மங்களகரமான அடையாளம். அதனால், அதை பூஜையில் இணைத்துக் கொள்வதும் பொருத்தமாகவே அமைகிறது. இதை பெண்கள்தான் செய்ய வேண்டும். வீட்டில் தனியாகவும் செய்யலாம். கோயிலில் குழுவாகவும் செய்யலாம். துர்க்கா ஸ்தோத்திரம் சொல்லி, எல்லோரும் பூஜை செய்யவேண்டும். சப்தஸ் லோகி என்ற ஸ்லோகங்களை ஏழு தடவை கூறி வழிபட்ட பிறகு ஏழு முறை பிரதட்சிணம் வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.

திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கவும், மணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கவும், பொதுவாகவே குடும்பத்தில் கல்வி, செல்வம் போன்ற வளங்கள் பெருகவும் குத்து விளக்கு பூஜை செய்யலாம். எல்லா தேவதைகளும் அந்த ஜோதி உருவத்தில் ஆவாகனம் செய்யப்படுவதும், அவர்களுடைய ஆசிகள் நமக்கு எல்லா
நன்மைகளையும் தருவதும்தான் இதன் தத்துவம்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post குத்துவிளக்கு பூஜையை எப்படிச் செய்யவேண்டும்? தனியாக வீட்டிலும் செய்யலாமா? அதனால் கிடைக்கும் பயன் என்ன? appeared first on Dinakaran.

Tags : Lord ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?